இசையும் இலக்கியமும் இணை பிரியாதவை - சந்தோஷ் நாராயணன்

ஒரு கல்லூரி நிகழ்வொன்றிற்கு வந்திருந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை சந்தித்து உரையாடினேன். அவரது மகளும் பிரபல பாடகியுமான தீக்‌ஷிதா உடன் இருந்தார். 

1.    தமிழ் ராப் இசை வடிவத்தினை அதிகமாகப் பயன்படுத்துகிற இசை அமைப்பாளர்களுள் நீங்கள் முக்கியமானவர். கல்லி பாய் போல ஒரு திரைப்படம் தமிழில் சாத்தியமா?

தமிழ் ராப் வெகுகாலமாகவே தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றது. கல்லி பாய் திரைப்படம் போன்று ராப் பாடகர்கள் குறித்து ஆவணப்படுத்தப்படும் படங்கள் தமிழில் வரவேண்டும். மேலும், நமது கானா பாடகர்கள் நிறைய பேர் அது போன்ற வாழ்க்கையைக் கடந்து வந்தவர்களே. 

2.    இண்டிபெண்டன்ட் எனப்படும் சுயாதீன இசைக்குழுக்கள் தமிழில் அதிகம் உருவாகாமல் போனதற்கு சினிமாவின் ஆதிக்கம் காரணமா?

அது ஒரு காரணமாக சொல்ல முடியாது. நான் இரண்டையுமே ஒன்றாகத்தான் பார்க்கிறேன். இன்டிபெண்டண்ட் இசைக்குழுக்களின் பின்னணியில் வந்தவர்களுள் நானும் ஒருவன். இந்தப் பின்னணி தமிழ் சினிமா இசையமைப்புக்கு எனக்கு பெரிதும் உதவியது. இன்றைய தமிழ் சினிமா இயக்குனர்கள் கதை சார்ந்து படங்கள் எடுப்பதில் கவனம் செலுத்துகின்றனர். ஆகவே அதற்குரிய உழைப்பினை நாங்களும் தரவேண்டியுள்ளது. 

3.    இலக்கியத்திற்கும் இசைவாணர்களுக்கும் இருக்க வேண்டிய உறவு குறித்து நீங்கள் நினைப்பது என்ன?

மிக மிக முக்கியமாக கருதுகிறேன். இதனை மிகவும் அடிபட்டு கற்றுக் கொண்டேன். நம்முடைய தமிழை இழந்துவிட்டோம் என்றால் வேறொரு பண்பாடு, கலாச்சாரத்துக்கு சென்று விடுவோம். அதில் இருந்து வரும் இசை வேறொரு இசைவடிவமாகவே இருக்கும். ஆகவே தமிழும், நமது பண்பாட்டு அடையாளங்களும் நமது இசையில் அவசியம் இருக்க வேண்டும். ரஞ்சித், வெற்றிமாறன்,கார்த்திக் சுப்புராஜ், ராஜூ முருகன், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் மூலமாக இதனை கற்றுக் கொண்டேன்.

4.    தற்போதெல்லாம் பாடல்களின் பயன்பாடு இடைநிலை மற்றும் தீவிர சினிமா முயற்சிகளில் குறைந்து வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நல்ல விஷயம் தான். ஒரே ஒரு பாடல் கூட மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வரும் காலம் இது. ஆனால் நல்ல சினிமாக்கள் பாடல்களின் முக்கியத்துவம் இல்லாமலும் பிரமாதமாக வெற்றியடைகின்றன. பாடல்கள் வணிக ரீதியாக ஒரு படத்துக்கு பலம் கூட்டுபவை அல்ல என்று அனைத்து வித சினிமாக்களிலும் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.

5.    சந்தோஷ் நாராயணனின் பிற துறை ஆர்வங்கள் என்னென்ன?

இசை தான் எப்பவுமான ஆர்வம். குடும்பத்தினருடன் சதுரங்கம், கிரிக்கெட் விளையாட ரொம்பப் பிடிக்கும். 

6.    அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் என யாரை நினைக்கிறீர்கள்?

கோவிந்த் வஸந்தா மிக முக்கியமானவர். தைக்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவில் இருந்து வந்தவர். 96 திரைப்படத்தின் மூலமாக பிரமாதப்படுத்திவிட்டார். 


7.    நீங்கள் பணிபுரிந்த மெட்ராஸ், காலா, பரியேறும் பெருமாள், வடசென்னை உள்ளிட்ட படங்கள் தலித் மக்கள் மற்றும் தலித் அரசியல் குறித்து பேசியவை, கதைக்கருக்களைப்  போலவே பாடல்களும் மிகுந்த கவனத்தை ஈர்த்தவை. அதில் பணிபுரிந்த அனுபவம்  குறித்து? 

இயக்குனர்கள் கேட்பதை நேர்மையாக முடிந்த வரையில் கொடுப்பதற்கு முயற்சிக்கிறோம். நல்ல திரைப்படத்துக்கு செய்யும் இசை அந்தத் திரைப்படத்தை நோக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். நல்ல கதைக்கு கொடுக்கும் ஏற்ற சிறந்த இசை அதற்கு ஒரு முழுமையை கொடுக்கின்றது. இயக்குனர்களும் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாளுக்கு ஒரு ஆடியன்ஸாக தன் படத்துக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவுறக் கூறினார். மிகவும் சுதந்திரமாக இசையமைக்க முடிந்தது. 

8.    “ வெரி வெரி பேட்” பாடல் டிரெண்டிங் ஆகி விட்டது. ஜிப்சி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதல்லவா?

ராஜூ முருகனின் துணிச்சலான முயற்சி “வெரி வெரி பேட்” பாடல். நாடு முழுவதும் பயணம் செய்யும் நாடோடி ஒருவனைக் குறித்த படம். சமூகத்தில் நிகழும் விஷயங்களால் கதாநாயகனை வேறோரு மனிதனாக மாற்றுகிறது என்பதே கதை. பரியேறும் பெருமாளுக்கு கிடைத்த பலத்த வரவேற்பு ஜிப்ஸியிலும் நிச்சயம் கிடைக்கும். பாடல்கள் “வெரி வெரி குட்” என நீங்களே எழுதுவீர்கள் என்றார் புன்னகையுடன். 

- என்.திருக்குறள் அரசி
நன்றி: இந்து தமிழ்திசை நாளிதழ் 

Comments